திருவிழாக்கள்

1.சித்திரை திருவிழா

சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கும். பதினொரு நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் தொட்டில் வாகனம், சர்ப்பவாகனம், கருட வாகனத்தில், தாமரைபூவாகனம், என்று ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி அய்யா வைகுண்டசுவாமி அருள்புரிவார். நாள்தோறும் அன்னதர்மம் நடைபெறும். எட்டாம் நாள் திருவிழாவில் தாமரைகுளம் ஊரின் முக்கிய வீதிகளில் வாகனத்தில் வீதிஉலா வந்து கலிவேட்டை நடைபெறும். பதினொன்றாம் நாள் திருத்தேரோட்டம் நடைபெறும். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிறுக்கிழமைகளில் சிறப்பு பணிவிடைகள் மற்றும் வாகனபவனி, பக்தர்களுக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது. தினந்தோறும் மூன்று வேளைகளும் பணிவிடைகள் வைகுண்டசுவாமிக்கு நடைபெறுகிறது.

2.கார்த்திகை திருஏடுவாசிப்புவிழா

அய்யா வைகுண்டசுவாமியின் திருவருளால் அரிகோபாலன் சீடர் இயற்றிய அகிலத்திரட்டு அம்மானை திருஏடுவாசிப்பு திருவிழாவாக நடைபெறும். இத்திருவிழா கார்த்திகை மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை துவங்கி ஏழுநாட்கள் நடைபெறுகிறது அதன் பின்னர் பதினேழு நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஏழு நாட்கள் நடைபெற்று திருஏடு வாசிப்பு திருவிழா முடியும். (தொடக்க காலத்தில் ஏட்டுபிரதிகள் இல்லாத நிலையில் மூலஏடு தாமரைகுளம்பதியில் மட்டுமே இருந்தது. அதனால் அகிலத்திரட்டு அம்மானை ஏட்டை தாமரைகுளம்பதியில் இருந்து சுவாமிதோப்பு பதிக்கு கொண்டு சென்று பதினேழு நாட்கள் தொடர்ச்சியாக திருஏடு வாசிப்பு திருவிழா முடிந்ததும் பின்னர் மீண்டும் தாமரைகுளம்பதியில் ஏழு நாட்கள் திருஏடு வாசிப்பு நடைபெறுவதால் இந்த திருவிழா இடைவெளி ஏற்பட்டது. தற்போது படி ஏடுகள் எல்லா பதிகளிலும் மற்றும் தாங்கல்களிலும் இருப்பதால் தற்போது திருஏடு எடுத்துச்சென்று வாசிக்கப்படும் வழக்கம் இல்லை)

3.அய்யா அவதார தின விழா

மாசி மாதம் 20 ம் நாள் அய்யா வைகுண்டசுவாமியின் அவதார நாள் கொண்டாடப்படுகிறது. தாமரைகுளம்பதியில் அய்யா அவதார நாள் சிறப்பு பணிவிடைகளுடன் அன்னதர்மம் மற்றும் வாகனபவனியுடன் சிறப்பாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து அய்யாவழி பக்தர்கள் வழிபாடு செய்ய தாமரைகுளம்பதிக்கு வருகின்றனர். அய்யா வைகுண்டசுவாமி அவதார தினத்தன்று தமிழக அரசு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RH) வழங்குகிறது. மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.